Tuesday, October 27, 2009

யாதும் ஊரே யாவரும் கேளிர் !

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

இப்பாடல் புறநானூற்றில் தொகுக்கப் பட்டுள்ளது. இப்பாடலை எழுதியவர் கணியன் பூங்குன்றனார், சோதிடத்தில் வல்லவராதலால் 'கணியன்' என அழைக்கப் பெற்றார்.

ஊழ் என்பது ஒருவன் செய்யும் நன்மையும் தீமையும் மறுபிறவியிலும் தொடர்வதாகும். ஆதலால் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை, அவை முற்பிறவிப்பலன். ஊழின் வழி வாழ்வும் அதன் வழி இறப்பும் உண்டாகின்றன. எனவே வாழ்வதற்காக மகிழ்ச்சியும், வாழ்வது துன்பத்துக்குள்ளாகும்போது அதை வெறுப்பதும் வேண்டியதன்று.

ஊழ் என்று இருப்பதும் அதன் விளைவும் நூல்களில் கூறப்பட்டுள்ளன. அந்நூல் அறிவுத் திறமுடையவரால் எழுதப்பட்டவையாகும். அவற்றைக் காட்சியளவையால் காண இயலாது.

பெரியவர்கள் நல்ல ஊழ் காரணமாக உயர்ந்து காட்சியளிக்கின்றனர். தீயூழ் காரணமாகச் சிலர் சிறியவர்களாக காட்சியளிக்கின்றனர். அவர்களை வியப்பதும், இகழ்வதும் தேவையற்றது.

நீர் ஓடும் திசையிலேயே தெப்பமும் ஓடும். எதிர்த்திசையில் செல்லாது. அதுபோல உயிர் வாழ்க்கையானது ஊழ்வினையின் வழியே செல்லும். அதற்கு மாறாக, எதிராக நடைபெற இயலாது.

ஊழின் காரணமாக இந்த ஊரில் இந்நாரின் மகனாகப் பிறந்த ஒருவர் வேறு ஒரு ஊரில், நாட்டில் வேறு ஒருவர் மகனாகப் பிறக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே, எங்கட்கு எல்லா ஊர்களும் எம் ஊர்களாகும். எல்லாரும் உறவினரே ஆவர் என்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் வரிகளை சாதரன குடிமகன் முதல் முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வரை அனைவரும் பழந்தமிழர் அறிவுக் கூர்மைக்கும், தொலை நோக்குப் பார்வைக்கும் எடுத்துக்காட்டாக கூறுவதைப் பார்க்க முடிகிறது.

இந்தப் பாடலின் ஆங்கில மொழிமாற்றம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C , from http://tamilnation.org/

இவ்வாறாக இருக்கிறது.
இதுபோல நிறைய இலக்கியச் சுவைகள் உள்ளன. அவை வரும் பதிவுகளில்.

6 comments:

M.S.R. கோபிநாத் said...

முத்துவேல், உங்கள் பதிவு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

Murali V said...

muthu,
please keep doing this nice work.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சுராலெனின் said...

ஏதேனும் புதிய தமிழ்த்தொடர் தொடங்கலாமே?

சுராலெனின் said...

தமிழ் மீதுள்ள உனது ஆர்வத்திற்க்கும் ஆளுமையான எழுத்து திறமைக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.

Muthuvel said...

நன்றி நண்பரே

Post a Comment

 
Freelance Jobs